திரு.வி. கல்யாணசுந்தரனார் (1883-1953) Thiru. Vi. Ka.


திரு.வி.க- குறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகள்

திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் - திரு.வி.க. (1883 - 1953)

  • திரு.வி.க. தம் தந்தையிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
  • தமிழ் பயின்றது: நா. கதிரைவேல் என்பாரிடம் (வெஸ்லி பள்ளியில்)
  • தமிழோடு சைவ நூல்களை மயிலை தணிகாசலம் என்பவரிடம் பயின்றார்.
  • அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
  • சிறந்த மேடைப் பேச்சாளர்
  • இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.
  • தேசபக்தன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார்.
  • தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தவர்.
  • தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர்,
  • வெஸ்லி கல்லூரியில் (சென்னை இராயப்பேட்டை) தலைமைத் தமிழாசிரியராக பணியாற்றியவர்.
  • தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்.
  • எழுதிய நூல்கள்: 
    • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், 
    • பெண்ணின் பெருமை, 
    • தமிழ்ச்சோலை, 
    • பொதுமை வேட்டல், 
    • முருகன் அல்லது அழகு, 
    • இளமை விருந்து 
    • என் கடன் பணி செய்து கிடப்பதே,
    • சைவத் திறவு,
    • இந்தியாவும் விடுதலையும்,
    • பொதுமை வேட்டல், 
    • திருக்குறள் விரிவுரை (திருக்குறள் தெளிவுரை- வ.ஊ.சி.)

தமிழ்வழிக் கல்வி குறித்த திரு.வி.க- வின் கருத்துரைகள்

  • ஏட்டுக் கல்வி மட்டுமின்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே,  
  • தொழில்நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத்தின் பொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணம்மிருக்கிறாள்.  அவ்வெச்சரிக்கையை மாணாக்கர் செவி சாய்த்து நடப்பாராக. 
  • நாம் தமிழ் மக்கள்; நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு.  அதுவே இயற்கை முறை‘
  • முதல் முதல் தாய் மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
  • தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது.
  • தமிழர் மொழிப்பெயர்ப்பு முறைக்கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது ?
  • குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது.
  • கலப்பில் வளர்ச்சி உண்டென்பது இயற்கை நுட்பம்.
  • தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.
  • தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார்.
  • கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

காப்பியக் கல்வி குறித்த கருத்துரைகள்

  • வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று.  அதைத் தலையாயது என்றும் கூறலாம்.
  • நாம் தமிழர்கள்.  நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் எங்குச் செல்லல் வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ?
  • இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, 
  • இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, 
  • இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், 
  • இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், 
  • இயற்கைத் தவம் சிந்தாமணி, 
  • இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், 
  • இயற்கை அன்பு பெரியபுராணம், 
  • இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.  இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
  • இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள் தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்.

இயற்கைக் கல்வி குறித்த கருத்துரைகள்

  • காடு செறிந்த ஒரு மலைமீது ஏறி, ஒரு மரத்தடியில் நின்று  மண்ணையும் விண்ணையும் நோக்குங்கள்.
  • அந்தியில் ஞாயிறு அமருங் கோலத்தையும் பறவைகள் பறந்து செல்வதையும் கால்நடைகளின் மணியோசையையும் காணுங்கள்; கேளுங்கள்.
  • தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது?
  • கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம். அந்த யாழ் எங்கே?


அறவியல் கல்வி குறித்து திரு.வி.க.

  • உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது அறிவியல்  என்னும் அறிவுக்கலை.
  • புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
  • அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞர் உலகில் பரவல் வேண்டும்.

திரு.வி.க இளமைவிருந்து நூலில் தமிழினைக் கட்டுக்குள் அடக்காமல் செழுமையுறச் செய்ய இளைஞர்களை அழைக்கிறார்.

"பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம்.  அவள் இதம் துடிக்கிறது.
சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன;  இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள்.  இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள்.
இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து.  அவ்வொளி வீசி எழுங்கள்; எழுங்கள்"