கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - Kavimani Desigavinayagam Pillai -School book notes

 


கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார்
  • பிறப்பு - தேரூர் (கன்னியாகுமரி மாவட்டம்)
  • பணியாற்றியது  ஆசிரியராக 36 ஆண்டுகள் 
  • படைப்புகள்
    • ஆசியஜோதி (தழுவல் நூல் - Light of Asia - எட்வின் அர்னால்டு) (இந்நூல் புத்தரின் வரலாற்றை கூறுகிறது)
    • மருமக்கள் வழி மான்மியம்
    • கதர் பிறந்த கதை
    • உமர்கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நுல்)
    • மலரும் மாலையும்

  • உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் - புத்தர்
  • பிம்பிசார மன்னனுக்கு புத்தர் அறிவுரை கூறுவதாக பின்வரும்  கவிமணியின் பாடல் அமைந்துள்ளது.

ஆசியஜோதி

நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன்
    நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;                         (அஞ்சினர்-பயந்தனர்)
துன்று கருணை நிறைந்த வள்ளல் - அங்கு        (கருணை-இரக்கம்)
    சொன்ன மொழிகளை கேளும் ஐயா!

வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த
    மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு                        (வீழும் - விழும்)
    வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!            (ஆகாது - முடியாது)

யாரும் விரும்புவது இன்னுயிராம்- அவர்
    என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்
    பாடு முழுதும் அறிந்திலீரோ?

நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த 
    நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;                (நீள்நிலம் - பரந்த உலகம்)
பாரினில் மாரி பொழிந்திடவே - வயல்            (முற்றும் - முழுவதும்)
    பக்குவ மாவது அறிந்திலீரோ?                          (மாரி - மழை) (பார்- உலகம்)

காட்டும் கருணை உடையவரே - என்றும்
    கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார் - இந்த
    மர்மம் அறியாத மூடரையா !
 
காடு மலையெலாம் மேய்ந்துவந்து - ஆடுதன்
    கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதம் - ஒரு 
    தீய செயலென எண்ணினீரோ?

அம்புவி மீதில்இவ் ஆடுகளும் - உம்மை
    அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்                        (கும்பி - வயிறு)
    நன்மை உமக்கு வருமோ ஐயா?

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை
    ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச்
    செல்வது ஒருநாளும் இல்லைஐயா!

ஆதலால் தீவினை செய்யவேண்டா - ஏழை
    ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்                (பூதலம் - பூமி)
    புத்தியை விட்டுப் பிழையும்ஐயா!

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
    காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்
    இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல
    ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்
    ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

வருமுன் காப்போம் (மலரும் மாலையும்)

உடலின் உறுதி உடையவரே
    உலகில் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
    இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தமுள்ள இடமெங்கும்
    சுகமும் உண்டு நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்        (நித்தம் நித்தம் - நாள்தோறும்)
    நீண்ட ஆயுள் பெறுவாயே.              (பேணுவையேல் - பாதுகாத்தல்)

காலை மாலை உலாவிநிதம்
    காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
    காலன் ஓடிப் போவானே!

கூழை யேநீ குடித்தாலும்
    குளித்த பிறகு குடியப்பா
ஏழை யேநீ ஆனாலும்,
    இரவில் நன்றாய் உறங்கப்பா!

மட்டுக் குணவை உண்ணாமல்        (மட்டு - அளவு)
    வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!                (திட்டுமுட்டு- தடுமாற்றம்)
    தினமும் பாயில் விழுந்திடுவாய்!

தூய காற்றும் நன்னீரும்
    சுண்டப் பசித்த பின் உணவும்        (சுண்ட- நன்கு)
நோயை ஓட்டி விடும்அப்பா!
    நூறு வயதும் தரும்அப்பா!

அருமை உடலின் நலமெல்லாம்
    அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
    வையம் புகழ வாழ்வாயே!                (வையம்- உலகம்)



மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே!
வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!
கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே!
பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும்
பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!


தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
    துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
    அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை
    நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி      (இயல்பு நவிற்சி அணி)

பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
    பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
    செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே - உலகம்
    நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே - அண்டித்
    தீண்ட ஒண்ணாதார்!